×

11 டன் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவான கும்பல் தலைவனை பிடிக்க தனிப்படையினர் தீவிரம்

சேலம், செப்.25:சேலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு 11டன் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில், தலைமறைவான கும்பல் தலைவனை பிடிக்க தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டம் புள்ளாகவுண்டம்பட்டி அருகே, கத்தேரி வினோபாஜி நகரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, சேலம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 லாரி, 2 ஆம்னி வேன், ஒரு காரில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதை தொடர்ந்து, வாகனங்களுடன் 11 டன் ரேஷன் அரிசியை, போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட டைனிதாமஸ், தினேஷ்குமார், பிரசாந்த், டிரைவர் தனபால், ஆறுமுகம், மாதேஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர். ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் மிக குறைந்த விலைக்கு வாங்கி, கர்நாடகாவுக்கு கடத்தி வந்த கும்பல் தலைவனான பவானியை சேர்ந்த ராஜேஷ் மீது, 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் 4 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.  இருப்பினும், தொடர்ந்து இடங்களையும், ஆட்களையும் மாற்றியும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து, தலைமறைவாக உள்ள ராஜேஷ் உள்பட 4 பேரை கைது செய்ய ஈரோடு, பவானி பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா