ரேஷன் கடை முன்பு குட்டைபோல் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரிக்கை

இடைப்பாடி, செப்.25:  இடைப்பாடி அருகே வெள்ளாண்டிவலசு பகுதியில் ரேஷன் கடை முன்பு குட்டைபோல் தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரி, பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.இடைப்பாடி வெள்ளாண்டிவலசு பகுதியில் 5 மற்றும் 6ம் நம்பர் ரேஷன் கடை உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதற்கு அருகில் மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும் அலுவலர்கள் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் தங்கியுள்ளனர். அந்த குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வெளியேற வழியின்றி, ரேஷன் கடை முன்பு குட்டைபோல் தேங்கி உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இதனை அகற்றக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், கழிவுநீரை அகற்றாவிட்டால் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க மாட்டோம் என கூறி, கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சீரமைத்து, கழிவுநீரை அகற்றினர். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு, ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி சென்றனர்.

Related Stories: