ஓமலூர் அருகே அடிப்படை வசதிகள் வேண்டி திரண்ட மக்கள்

சேலம், செப்.25: சேலம் ஓமலூர் அடுத்த செம்மண்கூடல் ஊராட்சியில், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

சேலம் கலெக்டர் ரோகிணி தலைமையில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஓமலூர் அடுத்த செம்மண்கூடல் ஊராட்சியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘செம்மண்கூடல் ஆதிதிராவிடர் தெரு பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கான சாக்கடை, தெருவிளக்கு, குடிநீர் உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, சாக்கடை அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டன. அப்போது, வீதிகளில் இருந்த குடிநீர் பைப் லைன்கள் உடைத்து அகற்றப்பட்டது. அதன்பின்னர் இன்றுவரை அதனை சரிசெய்யவில்லை. அப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிக்கு அருகில், 3 பைப்லைன் மட்டுமே உள்ளது. அனைத்து குடும்பத்தினரும் இதனையே பயன்படுத்த வேண்டியுள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு எங்களுக்குள் தகராறும் ஏற்படுகிறது. எனவே, ஏற்கனவே இருந்ததுபோல் தனி பைப்லைன் அமைத்து தரவேண்டும். மேலும், தெருவிளக்கு, சாக்கடை மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்,’ என்றனர்.

இலவச வீட்டு மனை கேட்டு மனு: இதேபோல், மேச்சேரி அடுத்த தெத்திகிரிப்பட்டி கச்சரானூரைச் சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் வசித்து வரும் ஏராளமான குடும்பங்களுக்கு சொந்தமாக வீடு, நிலம் எதுவும் இல்லை. விவசாய கூலிகளான, திருமணமான பலர் ஒரே இடத்தில் தங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, தகுதிவாய்ந்தவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: