×

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக 2 உரிமையியல் நீதிமன்றங்கள் தொடக்கம்

சேலம், செப்.25: சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக 2 உரிமையியல் நீதிமன்றங்களை மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் திறந்து வைத்தார்.சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக 3வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், 4வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் துவக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் தலைமை வகித்து, இரு புதிய நீதிமன்றங்களை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘சேலம் மாவட்டத்தின் 50வது நீதிமன்றமாக புதிய நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடி தீர்வு காண, அதிகப்படியான நீதிமன்றங்களை உருவாக்குவது அவசியமாகிறது. வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணும் பட்சத்தில், சட்டத்திற்கு புறம்பான வழிகளை மக்கள் தேடி செல்ல மாட்டார்கள். வழக்குகளை தாமதப்படுத்தாமல் நடத்தி முடிக்கும்போது, குற்றங்களும் குறையும்,’ என்றார்.
முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் தொடுதிரை இணைய வசதியை மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் தொடங்கி வைத்தார். இதன்மூலம் சேலம் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் விவரங்களை வக்கீல்கள் எளிதில் தெரிந்துகொள்ள இயலும் என தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவில், முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர், தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் விஷ்வநாத், மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி சிவஞானம், சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் பொன்னுசாமி, செயலாளர் அய்யப்பமணி ஆகியோரும் பேசினர். இதில், நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை