×

ஏமாற்றியது தென்மேற்கு பருவமழை வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா?

சிவகங்கை, செப்.25: தென்மேற்கு பருவமழை கைவிட்ட நிலையில் வடகிழக்கு பருவமழையை மட்டுமே சிவகங்கை மாவட்ட விவசாயிகள்
நம்பியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் நெல் 80 ஆயிரம் ஹெக்டேரிலும், கரும்பு சுமார் 4 ஆயிரம் ஹெக்டேரிலும், வாழை 3 ஆயிரம் ஹெக்டேரிலும், நிலக்கடலை 3 ஆயிரத்து 500 ஹெக்டேரிலும், காய்கறிகள், சிறு தானியம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் எஞ்சிய நிலத்திலும் பயிர் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் 90 சதவீத விவசாய நிலங்கள் கண்மாய் பாசனத்தை நம்பியே உள்ளன. 80 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் செய்யப்பட்டு வந்த நெல் விவசாயம் என்பது குறைந்து கடந்த ஆண்டு 69 ஆயிரத்து 200 ஹெக்டேர் நிலத்தில் மட்டுமே செய்யப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வரை காரி, ராபி(கோடை விவசாயம்) பருவம் எனப்படும் இரு போக சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலை மாறி ராபி பருவ விவசாயம் என்பது முழுமையாக குறைந்து வருகிறது. வழக்கமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வடகிழக்கு பருவமழையே கைகொடுக்கும். கோடை மழை மற்றும் தென் மேற்கு பருவமழை எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்காது. ஆனால் இந்த ஆண்டு கோடை மழை மற்றும் தென் மேற்கு பருவமழையின் தொடக்கம் விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும் வகையில் இருந்தது. மே மாதம் மாவட்டம் முழுவதும் கோடை மழை பெய்தது. இதுபோல் தென் மேற்கு பருவமழை தொடங்கிய சில நாட்கள் மாவட்டம் முழுவதும் பரவாலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளங்கள், கண்மாய்களுக்கு நீர்வர தொடங்கியது. பல ஆண்டுகளுக்குப்பின் சிவகங்கை மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை கணிசமாக பெய்ய தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அதன்பிறகு விவசாய கண்மாய்களுக்கு நீர் வரும் வகையில் கன மழை இல்லாமல் போனது.
கடந்த சில ஆண்டுகளாக கோடை மழை தென்மேற்கு பருவ மழை ஆரம்பத்தில் கன மழையுடன் தொடங்கியதை நம்பி உழுவது, விதைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதனால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்காமல் வடகிழக்கு பருவமழையை மடடுமே நம்பி காத்திருக்கின்றனர். விவசாயிகள் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு கோடை மழையும் அதிக அளவில் பெய்வதுபோல் தொடங்கி பிறகு பெய்யாமல் போனது. அதுபோல் தென் மேற்கு பருவமழையும் விவசாயத்திற்கு தேவையான அளவு இல்லை. இதனால் அடுத்த மாதம் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழையை மட்டுமே நம்பி உள்ளோம். பல ஆண்டுகளாக வறட்சி நிலவி வரும் நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்யும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது’’  என்றனர்.


Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்