×

அதிகாரிகள் அக்கறைகாட்டாமல் கிடப்பில் மழைநீர் சேகரிப்பு திட்டம்

தொண்டி, செப். 25: அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டி தற்போது எவ்வித பயன்பாடும் இல்லாமல் உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர அதிகாரிகள் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடுமையான வறட்சி மற்றும் மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக கடந்த காலத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெற்று கட்டப்பட்ட அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டப்பட வேண்டும் என கட்டாய படுத்தப்பட்டது. இதனால் மழை காலங்களில் பெய்யும் மழை நீர் முழுவதும் நிலத்திற்குள் சென்று நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்தது.
காலப்போக்கில் இத்திட்டத்தில் அதிகாரிகள் போதிய கவனம் செலுத்தாததால் பொதுமக்களும் கவனம் செலுத்த வில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமுக ஆர்வலர் சாதிக் பாட்சா கூறியது, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதியில் அனைத்து அரசு அலுவலகம் மற்றும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டாயமாக்கப்பட்ட போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. சில வருடங்களாக அதில் கவனம் செலுத்தாததால் மழைநீர் அனைத்தும் வீணாக கடலில் கலக்கிறது. பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருள்கள் நிலத்தின் மேற்பரப்பில் கிடப்பதால் மழைநீர் உள்ளே செல்ல முடியாமல் விரைவில் ஆவியாகி விடுகிறது. அதனால் மீண்டும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளில் கவனம் செலுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்றார்.


Tags :
× RELATED உலக புத்தக தின விழா