குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகோரி யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

பேரையூர், செப். 25: குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகோரி, மூன்று கிராம மக்கள் சேடபட்டி யூனியன் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பேரையூர் அருகே, சேடபட்டி ஒன்றியம், பேரையம்பட்டியில் உள்ள அருந்ததியினர் குடியிருப்பில் 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு ஒரு குடிநீர் குழாய் மட்டும் இருப்பதால், குடியிருப்புவாசிகளுக்கு தேவையான குடிநீர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, போதிய குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்.கீழத்திருமாணிக்கம் கிராமத்தில் அருந்ததியினருக்காக இலவச வீட்டுமனை கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரையம்பட்டி, கீழத்திருமாணிக்கம் கிராமமக்கள் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் விடுதலை சேகரன் தலைமையில், சேடபட்டி ஒன்றியச்செயலாளர் பூப்பாண்டி, ஈஸ்வரன், ஆகியோர் முன்னிலையில், சேடபட்டி யூனியன் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.அலுவலகத்தில் ஆணையாளர் இல்லாததால், யூனியன் மேலாளர் ஜெயராமனிடம் மனு கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததை தொடர்ந்து, கிராமமக்கள் கலைந்து சென்றனர்.இதேபோல, சேடபட்டி ஒன்றியம், அதிகாரிபட்டியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் போதிய வாறுகால் இல்லாமல் கழிவுநீர் தெருக்களில் தேங்குகிறது. இதனால், நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், போதிய அடிப்படை வசதியில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில், காலனி பொதுமக்கள் வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தரக்கோரி,மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராணி தலைமையில், சேடபட்டி ஒன்றியச் செயலாளர் ஜெயபால், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நேற்று யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: