தும்பலப்பட்டி கூட்டுறவு சங்க தேர்தல் திமுக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி

பழநி, செப். 25:  தும்பலப்பட்டி கூட்டுறவு சங்க தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட 11 பேரும் வெற்றி பெற்றனர். பழநி அருகே தும்பலப்பட்டியில் டிடி 518 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 1ம் தேதி நடந்தது. 11 உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் திமுகவினர் வெற்றி பெறும் சூழ்நிலை நிலவி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. அப்போது அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலர் வாக்கு எண்ணிக்கையின்போது ரகளையில் ஈடுபட்டனர். மேலும் வாக்குபெட்டியை சேதப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. அசம்பாவிதாமான சூழல் ஏற்பட்டதால் தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தினர். இதனைத்தொடர்ந்து நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை நீதிமன்ற உத்தரவின்படி நேற்று நடத்தப்பட உள்ளதாக தேர்தல் அதிகாரிகளால் பத்திரிகை விளம்பரம் அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று தேர்தல் அலுவலர் செல்வராஜ், மாவட்ட தேர்தல் அலுவலர் இளமதி, தாசில்தார் சரவணக்குமார் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட 11 நிர்வாக்குழு உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர். முன்னதாக வாக்கு எண்ணிக்கை வீடியோ கேமிராவால் பதிவு செய்யப்பட்டது. டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு அர.சக்கரபாணி எம்எல்ஏ, மேற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் வாழ்த்தினர்.  

Related Stories: