சாலையோர கடைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

திண்டுக்கல், செப். 25:  சாலையோர கடைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் கடைகள் வைக்க அனுமதி கோரியும் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் நகர் முக்கிய சாலையோரங்களில் காய்கறி, பழங்கள் உள்பட பல்வேறு பொருட்களை தரையில் அமர்ந்தும். தள்ளுவண்டியிலும் 500க்கும் மேற்பட்டோர் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி அலுவலர்கள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கடைகளை அகற்றி அனைத்து பொருட்களையும் எடுத்து சென்று விட்டனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கிறது எனக்கூறி விடுதலை சிறுத்தை கட்சி சாலையோர வியாபார சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் நேற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாவட்ட செயலாளர் அன்பரசு தலைமை வகிக்க, நகர செயலாளர் ஆனந்தராஜ், தொகுதி துணை செயலாளர் பர்னா, தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், செய்தி தொடர்பாளர் ராஜா முன்னிலை வகித்தனர். போராட்டத்தில்  மீண்டும் கடைகள் அமைக்க அனுமதி கோரி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி அலுவலர்கள், நகர் வடக்கு போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

சாலையோர வியாபாரிகள் கூறுகையில், ‘‘ நாங்கள் கடந்த 50 வருடங்களாக சாலையோரங்களில் வியாபாரம் செய்து வருகின்றோம். இதை வைத்து தான் குடும்பத்தையும், குழந்தைகளின் படிப்பு செலவையும் செய்து வருகிறோம். எங்களுக்கு வேறு தொழிலும் தெரியாது. எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே கடை வைக்க அனுமதிக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: