ஈமு வளர்ப்பு கடன் வழங்கியதில் கொசவபட்டி கூட்டுறவு வங்கி பல லட்சம் மோசடி

கோபால்பட்டி, செப். 25:  கொசவபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பல லட்சம் மோசடி நடந்துள்ளதாக மகளிர் சுயஉதவிக்குழுக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சாணார்பட்டி அருகே கொசவபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வெண்புறா, ஆரோக்கியமாதா, இருதய ஆண்டவர் உட்பட 10க்கும் மேற்பட்ட சுயஉதவிக்குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் ஈமு கோழி வளர்ப்பதற்கு ரூ.40 லட்சம் கொசவபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வழங்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குழுவினரும் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கடன் பெற்றிருந்தனர். இதில் மானியமாக ரூ.1.5 லட்சம் அளிக்கப்பட்டது. இந்த மானியத் தொகையை வங்கியாளர்கள் குழுக்களுக்கு கொடுத்ததாக தெரியவில்லை. இதனால் குழுவினர் பாதிக்கும் மேற்பட்டோர் தாங்கள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதற்கிடையே ஈமு கோழி நிறுவனம் கொசவபட்டி அருகே 4 ஏக்கர் நிலத்தை வங்கிக்கு எழுதி கொடுத்துள்ளது. ஆனால் வங்கி இதுவரை அந்த நிலத்தை கையகப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஈமு கோழி நிறுவனத்தினர் அந்நிலத்தில் மா, தேங்காய் மரம் நட்டு தற்போது வருடத்திற்கு பல லட்சம் சம்பாதித்து வருகின்றனர்.

இது குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொசவபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் முடிந்து தலைவராக ராமையாவும், துணைத்தலைவராக மரியஆரோக்கியமும் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வரவு, செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து கூட்டத்திற்கு வந்திருந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஈமு கோழி நிறுவனம், வங்கி பிரச்னை குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டுறவு வங்கியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் இவற்றை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.இதுபற்றி துணைத் தலைவர் மரியஆரோக்கியம்  கூறுகையில், ‘‘கூட்டுறவு வங்கியில் ஈமு கோழி நிர்வாகத்திற்கு கொடுத்த பணத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. ஈமு. நிறுவனம் கொடுத்த நிலத்தை கையகப்படுத்தாதது ஏன்? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: