ஆக்கிரமிப்பால் எந்த வசதியும் பெற முடியவில்லை -தேவகவுண்டன்பட்டி மக்கள் குமுறல்

திண்டுக்கல், செப். 25:  வீட்டை சுற்றிலும் பட்டாநிலங்கள், ஆக்கிரமிப்பு உள்ளதால் குடிநீர், கழிப்பறை உள்ள எந்த வசதியையும் பெற முடியவில்லை. பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஊரைவிட்டு வெளியில் செல்ல முடிவு செய்துள்ளோம் என்று தேவகவுண்டன்பட்டி காலனி மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.வேடசந்தூர் மாரம்பாடி அருகேயுள்ளது தேவகவுண்டன்பட்டி. இங்குள்ள ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 50 குடும்பங்கள் உள்ளன. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கட்டித் தந்த வீட்டில் இவர்கள் வசித்து வருகின்றனர். தற்போது  உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்ந்து, குடும்பங்களும் அதிகரித்து விட்டன. இதனால் ஒரே வீட்டை இரண்டு, மூன்று குடும்பங்கள் பங்கு போட்டு வாழ்ந்து வருகின்றன. நெருக்கடியால் சிக்கித்தவித்து வரும் இவர்களுக்கு மாற்று இடம் வழங்கி வீடு கட்டித்தர வேண்டும் என்று இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து குறைதீர்கூட்டத்தில் மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், எங்களின் குடியிருப்புகளுக்கு 4 பக்கமும் பட்டாநிலம் உள்ளது. வீட்டிற்கு வெளியே நெருக்கமாக இதுபோன்ற இடங்கள் அமைந்துள்ளன. இதனால் வெளிப்புழக்கம் மிகவும் குறைந்துவிட்டது. வீட்டைவிட்டு வெளியே வந்தாலே பட்டா நிலத்தில்தான் காலடி எடுத்து வைக்க வேண்டிய நிலை உள்ளது. தனிநபர் கழிப்பறை உள்ளிட்ட திட்டங்களில் பயன்பெற முடியவில்லை. மதுரைவீரன் கோயில் அருகே தென்புறத்தில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் பகுதிக்கு குழாய் அமைக்க இடம் இல்லாததால் நீர் பெற முடியவில்லை. ேமலும் கோயில் திருவிழா போன்றவற்றிற்கும் இடமில்லாத நிலை உள்ளது. பொதுஇடத்தை பலரும் ஆக்கிரமித்துள்ளனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மேலும் உறைவிடம், சுகாதாரம், நீர், மின்சாரம் போன்ற பல்வேறு அடிப்படை  தேவைகளுக்கும் அல்லாட வேண்டியதுள்ளது. வேடசந்தூர் தாலுகா அலுவலகம் மற்றும் பாராளுமன்ற துணை சபாநாயகர் ஆகியோரிடம் இதுகுறித்து முறையிட்டோம். இருந்தும் பலனில்லை.

இந்நிலை தொடர்ந்தால் ஆதார், ரேஷன்கார்டுகளை ஒப்படைத்துவிட்டு வரும் எம்பி.தேர்தலை புறக்கணிக்கவும், ஊரைவிட்டு வெளியே செல்லவும் தயாராக இருக்கிறோம்’’ என்றனர்.

Related Stories: