பழநியில் பல்லை காட்டிய புதிய சாலை : மார்க்சிஸ்ட் கட்சி போராட்ட அறிவிப்பு

பழநி, செப். 25:  பழநி லட்சுமிபுரத்தில் புதிதாக போடப்பட்ட தார்சாலை 2 நாட்களிலேயே பெயர்ந்து வருவதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பழநி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் ரூ.21.60 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான புதிய பைப்லைன் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டிருந்தன. பணிகள் முடிந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்காரணமாக ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் தற்போது புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் புதிய சாலைகள் தரமானமாக அமைக்கபடவில்லை என பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்து வருகின்றனர். நேற்று பழநி நகராட்சி எல்லைக்குட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு போடப்பட்ட புதிய தார்சாலைகளின் கற்கள் பெயர்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் கந்தசாமி, முன்னாள் நகராட்சித்தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் புதிய தார்சாலையை பார்வையிட்டனர்.

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பழநி நகரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தார்சாலைகள் தரமானதாக இல்லை. சாலைகள் போட்ட ஓரிரு நாட்களிலேயே ஜல்லிக்கற்கள் தனியாக பெயர்ந்து வருகின்றன.தார் போதிய அளவு பயன்படுத்தப்படவில்லை. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்க உள்ளோம். சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை ஒன்றுதிரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும்.

 மாவட்ட நிர்வாகமும் புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: