குஜிலியம்பாறை அருகே பள்ளி வளாகத்தில் இயங்கும் பகுதிநேர ரேஷன் கடை

குஜிலியம்பாறை, செப். 25:  குஜிலியம்பாறை அருகே பள்ளி வளாகத்தில் இயங்கும் பகுதிநேர ரேஷன்கடையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குஜிலியம்பாறை அருகேயுள்ள சுப்பிரமணிபிள்ளையூரில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தனி கட்டிடத்தில் பகுதிநேர ரேஷன்கடை இயங்கி வந்தது. இங்கு சுப்பிரமணிபிள்ளையூர் மட்டுமின்றி வேலாயுதகவுண்டனூர், சொக்கலிங்கம் பிள்ளையூர், தேவகவுண்டனூர், நரிமேடுபுதூர். கோப்பாநாயக்கன்பட்டி பிரிவு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 350 கார்டு தாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குகின்றனர். இடப்பற்றாக்குறை, அடிப்படை வசதிகள் இல்லாததால் புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த ரேஷன் கடையை இடித்தனர். தற்போது சுப்பிரமணிபிள்ளையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சமுதாய கட்டிடத்தில் பகுதிநேர ரேஷன்கடை செயல்படுகிறது. பொருட்கள் வழங்கும் நாளில் இங்கு பொதுமக்களின் கூச்சல் அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் பள்ளி வேலை நாட்களில் பாடம் நடத்துவதில் ஆசிரியர்கள் சிரமம் அடைகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும் தேர்வு நாட்களில் பொதுமக்களின் கூச்சலால் மாணவர்களின் கவனம் சிதறுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். எனவே பள்ளி வளாகத்தில் உள்ள பகுதிநேர ரேஷன் கடையை மாற்றியமைக்க விரைவில் புதிய கட்டிடத்திற்கான பணிகளை துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: