அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மனு

திருப்பூர், செப்.25: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்திர மக்கள் குறைதீர் கூட்டம், நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் மனு அளித்தனர்.

 திருப்பூர், வீரபாண்டி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திகேயன் அளித்த மனு:

திருப்பூர் நகர பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை  நெருபெரிச்சல் கிராமத்தில் கட்டப்படுவதாக தெரிகிறது. இதனால், பெருந்தொழுவு, நல்லூர், விஜயாபுரம், பல்லடம் அருகே வசிப்பவர்கள் பாதிக்கும் நிலை உள்ளது. அவ்வாறு வருவதற்கும் போதுமான பஸ் வசதியில்லை. இதனால், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களும் 25 கிலோ மீட்டர் பயனம் செய்யவேண்டிய நிலை உள்ளது.ஆகையால், தற்போது செயல்பட்டு வரும் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு சார்பதிவாளர் அலுவலகத்தை கொண்டு வர வேண்டும்

 திருப்பூர், அம்பேத்கார் காலனியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு: திருப்பூர், கொங்குமெயின் ரோடு, முதல் ரயில்வேகேட் அருகில் உள்ள அம்பேத்கார் காலனி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது. இப்பகுதியில், ஒரே வீட்டில் 2க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

பல்லடம், நாசுவன்பாளையம் பகுதிமக்கள் அளித்த மனு:  இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக முறையான குடிநீர் விநியோகம் கிடையாது. 10 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் குடிநீரும் போதுமானதாக இருப்பதில்லை. தெருவிளக்கு இல்லாமல், மாலை நேரத்திற்கு மேல் மாணவிகள் வெளியில் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். போதிய சாக்கடை வசதியில்லாத காரணத்தால் மழைக்காலங்களில் மிகுந்த சிரமந்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து அடிப்படை தேவைகளை தீர்த்து தர வேண்டும்.

 ஆதித்தமிழர் பேரவை சார்பில் அளித்த மனு: திருப்பூர், வாவிபாளையம் அடுத்த ஜே.ஜே.நகர், சமத்துவபுரம், முந்திரி தோப்பு ஆகிய பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. ஆகவே, இதில் பயனடைய நெருபெரிச்சல், வாவிபாளையம் பஞ்சாயத்து ஆபிஸ் அருகில் மற்றும் தோட்டத்துபாளையம், அம்மாபாளையம், டவர் லைன், பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் 60க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை பரிசீலனை செய்து அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வழங்க வேண்டும்.

 தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கம் சார்பில் அளித்த மனு: திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள ஏழை மக்கள் கடந்த 2016ம் ஆண்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வேண்டும் எனக்கோரி விண்ணப்பம் அளித்தனர். அவ்வாறு, விண்ணப்பம் அளித்தவர்களுக்கு இன்று வரை வீடு ஒதுக்கப்படவில்லை. எனவே, உடனடியாக சரியான விசாரணை செய்து, ஏழை மக்களுக்கு வீடு வழங்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டனர்.

 முன்னதாக தொழிலாளர்  உதவி ஆணையர் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் இயற்கை மரண நிவாரண உதவித்தொகையினையும், 11 பயனாளிகளுக்கு ரூ.11 ஆயிரம் மதிப்பில்  மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகையினையும் மற்றும் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், ஊத்துக்குளி ஆகிய சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் முதியோர் உதவித்தொகையும் என 29  பயனாளிகளுக்கு தலா ரூ.3 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட  உதவிகளை கலெக்டர் பழனிசாமி வழங்கினார்.

Related Stories: