மருத்துவமனைமீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

திருப்பூர்,  செப்.25:திருப்பூர்  காரணம்பேட்டை பெருமாள்கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ்(40). இவர்,  விசைத்தறி தொழிலாளி.இவரது மனைவி மயிலாத்தாள் (32) கடந்த 2 மாதங்களுக்கு  முன்பு மயிலாத்தாவிற்கு சொரியாசிஸ் நோயின் அறிகுறி தெரிந்தது.  இதையடுத்து நாகராஜ் மயிலாத்தாளை திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள   மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, பாதிக்கப்பட்ட  மயிலாத்தாவிற்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மருந்து வகைகளை மருத்துவர்  கொடுத்துள்ளார். இதனிடையே மருந்துகளை சாப்பிட்ட இரண்டு நாளில்  மயிலாத்தாவின் உடலில் பல இடங்களில் வீக்கம் ஏற்பட்டதோடு உடல் முழுவதும்  தடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நாகராஜ், மருத்துவமனைக்கு  தொடர்பு கொண்டு கேட்டபோது பாதிக்கப்பட்ட மயிலாத்தாவை கோவையில் உள்ள இதே  மருத்துவமனைக்கு அழைத்து வர சொல்லியுள்ளனர். தொடர்ந்து மருத்துவமனை  நிர்வாகம் மீண்டும் மயிலாத்தாவிற்கு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான வேறு பல  மருந்துகளை கொடுத்துள்ளனர்.

இதனை சாப்பிட்ட மயிலாத்தாள் உடலில் வீக்கம்  பலமடங்கு அதிகரித்ததோடு மூச்சு பேச்சின்றி படுத்த படுக்கையாகி உள்ளார்.  இதனால் அதிர்ச்சியடைந்த நாகராஜ் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று  நியாயம் கேட்டபோது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அலட்சியமாக பதில்  அளித்ததோடு இரண்டாவதாக வாங்கிய மருந்தின் பாதி தொகையை மட்டும் திருப்பி  கொடுப்பதாகவும் வேறு இடத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை செய்து  கொள்ளும்படி கூறியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த நாகராஜ் தனது மனைவி  மயிலாத்தாளை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.  இதனிடையே நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட  நாகராஜ் தனது மனைவிக்கு தவறான சிகிச்சை அளித  மருத்துவமனை நிர்வாகம்  மீதும் சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் கலெக்டரிம் மனு அளித்தார். மனுவை  பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனும் கலெக்டர்  உறுதியளித்தார்.

Related Stories: