திருப்பூரில் பலத்த மழை கால்வாய்களில் அடைப்பு கடைகளில் புகுந்த சாக்கடை நீர்

திருப்பூர், செப்.27: திருப்பூரில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக, சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கடைகளுக்கும் சாக்கடை கழிவு நீர் புகுந்தது. இதில் கடைகளில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமானது.

 திருப்பூர் மாநகராட்சி பகுதியில், பிளாஸ்டிக் பைகள் உட்பட மக்காத பொருட்களின் உபயோகத்தை படிப்படியாக குறைப்பது குறித்து, கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை சமூக ஆர்வலர்கள், ஓட்டல், மண்டப உரிமையாளர்கள், மளிகை கடை, இறைச்சிக்கடை மற்றும் பழமுதிர் நிலைய உரிமையாளர்கள், பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் என பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

 இதில், பிளாஸ்டிக் விற்பனையாளர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, ஜூலை 11ம் தேதி முதல் விற்பனையை தடை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் பல கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை வழக்கம் போல் நடந்து வருகிறது.    

 பாலித்தீன் பைகள், பேக்கரி, டீக்கடைகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றை ரோட்டோரம் உள்ள சாக்கடை கால்வாயில் வீசி சென்று விடுகிறார்கள். அத்துடன் வீதிகளில் வீசப்படும் இவைகளும் காற்றில் அடித்துச்செல்லப்பட்டு சாக்கடைகளில் விழுகின்றன. இந்த டம்ளர்கள் பாலித்தீன் பைகள் கால்வாயை அடைத்து கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல முடியாமல் தடுத்து விடுகிறது.

 இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திருப்பூரில் பலத்த மழை ெபய்தது. இந்த மழை காரணமாக பல இடங்களில் சாக்கடை கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வெளியேற முடியாமல் ரோட்டில் வழிந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

 இதேபோல் பல்லடம் ரோடு தமிழ்நாடு தியேட்டர் எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான காம்ப்ளக்ஸ் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கழிவு நீர், காம்ப்ளக்ஸ் தரைத் தளத்தில் இருந்த ஸ்டியோ, ஜெராக்ஸ் கடை, செல்போன் சர்வீஸ் கடை, பனியன் செகன்ட்ஸ் குடோன் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கடைகளில் புகுந்தது.

 இதில் கடைகளில் இருந்த டி.வி., ஜெராக்ஸ் மெஷின், தொலைபேசி, மேஜை டிராயரில் இருந்த பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமானது. நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த கடை உரிமையாளர்கள், சாக்கடை கழிவு நீரால், பொருட்கள் நாசம் அடைந்திருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

 தொடர்ந்து கடைக்குள் இருந்த கழிவு நீரை அகற்றி, பொருட்கள் அனைத்தையும் வெளியில் கொண்டு வந்து வைத்து சுத்தம் செய்தனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஆட்களை வைத்து சாக்கடை கால்வாயில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை சரி செய்தனர்.

Related Stories: