குடிநீர் வராததால் பொது மக்கள் சாலை மறியல் குழாய் மாற்றும் பணி துவக்கம்

திருப்பூர், செப். 25:  திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் ஆண்டிபாளையம் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால், ஆவேசமடைந்த பொது மக்கள் நேற்று  அவிநாசிபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 திருப்பூர் மாவட்டம் பொங்கலுார் ஒன்றியம் ஆண்டிபாளையம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி பொது மக்களுக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஆழ்குழாய் கிணற்றில் பொருத்தப்பட்ட குழாய் உடைப்பால், தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இப்பகுதியில் குடிநீர் வழங்கவில்லை. இதனால் பொது மக்கள் விலை கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

 இதுகுறித்து ஊராட்சி செயலர், ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம்  முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்காததால், கடந்த  11ம் தேதி இப்பகுதி பொதுமக்கள் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

 இருந்த போதிலும் கடந்த இரண்டு வாரங்களாக இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால், ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள், மா.கம்யூ., கிளை செயலாளர்கள் முருகேசன் மற்றும் நவநீதன் ஆகியோர் தலைமையில் நேற்று திருப்பூர்-தாராபுரம் சாலை அவிநாசிபாளையத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

 இதுகுறித்து தகவல் அறிந்து அவிநாசிபாளையம் போலீசாரும், பொங்கலுார் பி.டி.ஒ. ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குழாய் உடைப்பை சரிசெய்து, குடிநீர் வழங்குவதாக கூறினர். பின்னர் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் போர் வண்டியை அழைத்து, பழைய குழாய்களை அகற்றி புதிய குழாய்களை  கிணற்றில் இறக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். .  இதைதொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

Related Stories: