×

ரூ.18 கோடி மோசடி தம்பதி கைது

திருப்பூர், செப்.26:  திருப்பூரை சேர்ந்த செந்தில்குமார் (35) என்பவர் தனது மனைவி பிரியா (31) மற்றும் நண்பர் ராஜேஷ்கண்ணா ஆகிய இருவர் பெயரிலும் தனித்தனியே பின்னலாடை நிறுவனங்கள் துவங்கியுள்ளதாக கூறி, திருப்பூரில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.10.25 கோடி கடன் பெற்றுள்ளார். இந்த கடனை அடைக்க வங்கி நிர்வாகம் கெடுபிடி செய்தது. இந்நிலையில், பணத்தேவை அதிகம் உள்ளவர்களை செந்தில்குமார் அணுகி வங்கி கடன் பெற்றுத் தருவதாக கூறி  ஆவணங்களை பெற்றுள்ளார்.
இந்த ஆவணங்களை செந்தில்குமார் போலி ஆவணங்களாக தயார் செய்து வங்கியில் சமர்ப்பித்து கடன் பெற்றார். இதன்படி ஹாரூன்ரஷித் என்பவர் பெயரில் 8 கோடியே 34 லட்சம் கடன் பெற்று, அவருக்கு ரூ.5 கோடியை கடன் தொகையாக கொடுத்துள்ளார்.  அதேபோல சிவப்பிரகாசம் என்பவர் பெயரில் ரூ.6 கோடியே 12 லட்சத்து 60 ஆயிரம் கடன் பெற்று ரூ.1 கோடியே 12 லட்சத்தை மட்டும் கொடுத்துள்ளார்.ராமசாமி என்பவரின் பெயரிலும் ரூ.3 கோடியே 92 லட்சத்தை கடன் பெற்று மொத்தமாக அவரே எடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் கடன் பெற்றவர்களுக்கு வங்கியில் இருந்து கடன் தொகையை செலுத்த நிர்பந்தித்தபோது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.இதனையடுத்து ஹாரூன்ரஷித், சிவப்பிரகாசம், ராமசாமி மூவரும்கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அளித்த புகாரின் பேரில்,வழக்கு பதிவு செய்த மாநகர குற்றப் பிரிவு போலீசார் ரூ.18 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி பிரியா இருவரையும் நேற்று கைது செய்தனர்.

Tags :
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்