ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து இயந்திரத்தை சேதப்படுத்திய காட்டெருமை

கோத்தகிரி,செப்.25: நீலகிரி மாவட்டம் கோத்திகிரி அருகே ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த காட்டெருமை இயந்திரத்தை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கோத்தகிரி அருகே உள்ள ராம்சந்த் பகுதியில் ஏராளமான கள்,வணிகவளாகங்கள்,பேக்கரிகள்,ஓட்டல்கள் மற்றும் மார்க்கெட் ஆகியன உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை காட்டெருமை கன்று ஒன்று வழிதவறி பஜார் பகுதிக்கு வந்து விட்டது. வாகன இரைச்சல் மற்றும் பொதுமக்களை கண்டு மிரண்ட காட்டெருமை கன்று அங்கிருந்த ஏடிஎம் மையத்திற்குள் புகுந்தது.அது உள்ளே நுழைந்தவுடன் கண்ணாடி கதவுகள்  மூடிக்கொண்டன. இதனால் வெளியே வர முடியாமல் தவித்த காட்டெருமை கன்று ஏடிஎம் இயந்திரத்தை முட்டி மோதி சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த வங்கி அதிகாரிகள் கதவை திறக்க முயன்ற சமயத்தில் கண்ணாடிக்கதவுகளை உடைத்தபடி காட்டெருமை கன்று வெளியே பாய்ந்து ஓடியது. இதையடுத்து போலீசார் இரு புறமும் நின்று வாகனங்களை தடுத்து நிறுத்தி காட்டெருமை கன்றை பத்திரமாக வனத்திற்குள் விரட்டியடித்தனர்.

மேலும் காட்டெருமை புகுந்த ஏடிஎம் மையத்தை வங்கி அதிகாரிகள் மீண்டும் கண்ணாடி கதவுகள் பொருத்தும் வரை திறப்பதில்லை என முடிவு செய்துள்ளனர்.

Related Stories: