வீடுகளை காலி செய்ய மறுப்பு ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மக்களால் பரபரப்பு

கோவை, செப். 25: வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் வலியுறுத்துவதால் கோவை ஜீவா நகர் மக்கள் கோவை கலெக்டரிடம் நேற்று ஆதார்,ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ஜீவா நகர் உள்ளது.  இங்கு அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 1979 முதல் 100 குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 1988ம் ஆண்டு குடிசைமாற்று வாரியத்துடன் குத்தகை மற்றும் நிலக்கிரய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு, வீடு கட்டி வாரியத்திற்கு தவணை முறையில் பணம் செலுத்தி வருகின்றனர்.

 இந்நிலையில், ஜீவா நகருக்கு அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் அடுக்குமாடி குடியுருப்பிற்கு கார் செல்ல வழி ஏற்படுத்துவதற்காக இப்பகுதி வீடுகளை காலிசெய்ய குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதை ஏற்க மறுத்து ஜீவா நகரை சேர்ந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டரிடம் அரசால் வழங்கப்பட்ட ஆதார், ரேஷன் கார்டுகளை திரும்ப ஒப்படைக்க வந்தனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: