மாநகராட்சி சார்பில் கோவை நகரில் மீண்டும் வாடகை சைக்கிள் திட்டம்

கோவை, செப்.25:  கோவை மாநகராட்சி பகுதியில் மீண்டும் வாடகை சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு பெங்களூரை சேர்ந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்று மாசுபாட்டை தடுக்கவும், கோவை நகரில் ‘ஓபோ’ என்ற நிறுவனத்தினர், மாநகராட்சியுடன் இணைந்து வாடகைக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை கடந்த மார்ச் மாதம் துவக்கினர். முதல் கட்டமாக ஆயிரம் சைக்கிள் இதில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காத காரணத்தால், அந்த நிறுவனத்தினர் இத்திட்டத்தை தொடரவில்லை. இதை தொடர்ந்து, ‘மொபிசி’ என்ற வெளிநாட்டு நிறுவனத்தினர் வாடகை சைக்கிள் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சியால் தேர்வு செய்யப்பட்டனர்.இந்நிறுவனத்தினர் கடந்த ஜூலை மாதம் முதல் ஆர்.எஸ்.புரத்தில் வாடகை சைக்கிள் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தனர். ஆனால், பல்வேறு காரணங்களால் மொபிசி நிறுவனத்தினர் மாநகராட்சியுடன் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்தனர்.   அதை தொடர்ந்து, தற்போது மூன்றவதாக பெங்களூரை சேர்ந்த ‘மெட்ரோ பைக்கர்ஸ்’ என்ற நிறுவனத்தினர் இத்திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சியால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிறுவனத்தினர் முதற்கட்டமாக இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.  சைக்கிள்களை வாடகைக்கு பெற, முந்தைய நடைமுறைகளையே இவர்களும் பின்பற்றுவர். சைக்கிள் வாடகைக்கு எடுக்கும் போது, சம்பந்தப்பட்ட நபரின் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்படும். வாடகைக்கு சைக்கிள் எடுத்துக் கொண்டு குறிப்பிட்டநேரத்திற்கு எந்த பகுதிக்கு வேண்டுமானலும் செல்லலாம்.  இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன் கூறுகையில்,‘‘ பெங்களூரை சேர்ந்த மெட்ரோ பைக்கர்ஸ் என்ற நிறுவனத்தினர் மாநகரில் வாடகை சைக்கிள் திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வடவள்ளியில் முதல்கட்டமாக 500 சைக்கிள்கள் சோதனை அடிப்படையில் வாடகைக்கு விடப்படும்’’ என்றார்.

Related Stories: