கோவை செல்வபுரம் மாநகராட்சி பள்ளியில் ‘ஸ்மார்ட் மாடல் ஸ்கூல்’திட்டம் தொடக்கம்

கோவை, செப்.25: கோவை செல்வபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ஸ்மார்ட் மாடல் ஸ்கூல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அறம் பவுண்டேசன் சேர்டபிள் டிரஸ்ட் ஆகியவை சார்பில் செல்வபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ‘ஸ்மார்ட் மாடல் ஸ்கூல்’ திட்டம் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.அறம் பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் லதா சுந்தரம், தனியார் நிறுவன இயக்குனர் வித்யா செந்தில்நாதன் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி கல்வி அலுவலர் ரவி பங்கேற்று, ஸ்மார்ட் மாடல் ஸ்கூல் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த செல்வபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்பு உள்ளது. இதில் சுமார் 200 மாணவர் படிக்கின்றனர். இப்பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் ஸ்மார்ட்கிளாஸ் போர்டு அமைக்கப்பட்டுள்ளது. பாடங்கள் சார்ந்த விவரங்கள் சாப்ட்வேர் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு ஸ்மார்ட் போர்டு மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். இங்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அறம் பவுண்டேசன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு ஆசிரியர்கள் மூலம் பாடங்கள் மாணவ, மாணவிகளுக்கு எளிதாக புரியும் வகையில் கற்பித்தல், தமிழ், ஆங்கிலம், கணிதம், வானியல் மற்றும் அறிவியல் பாடங்கள் திரையில் வரும் வகையிலும், ஒலி பெருக்கியில் கேட்கும் வகையில் நடத்தப்படும். ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகள் ஒரு பிரிவாகவும், நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு இந்த ஸ்மார்ட் வகுப்பு எடுக்கப்படும்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,‘‘ மாநகராட்சி நிர்வாகத்தினர் சார்பில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி பள்ளிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அது ஒரு புறம் இருந்தாலும், அறம் பவுண்டேசன் உதவியுடன் ஸ்மார்ட் மாடல் ஸ்கூல் செல்வபுரம் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மேலும், அறக்கட்டளையின் கல்வியாளர்கள், மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலமாக பல்வேறு ஆலோசனைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படும்,’’ என்றனர்.

Related Stories: