அந்தியூரில் வாகனம் மோதி மாணவன் பலி

அந்தியூர், செப். 25:  அந்தியூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பிளஸ் 1 மாணவர் பலியானார். இறந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அந்தியூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

  அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன். கூலி தொழிலாளி. இவரது மகன் தினேஷ் (16), செம்புளிச்சாம்பாளையம் அரசு மேல் நிலைபள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் விளையாட்டு வீரர் என்பதால் தினமும் காலை நண்பர்களுடன் வாக்கிங் செல்வார். இதே போல் நேற்று காலை தினேஷ் தனது நண்பர்களுடன் வாக்ககிங் செல்ல சென்றுள்ளார். அப்போது,நண்பர்கள் வர தாமதமானதால் தனியாக ரோட்டோரம் நின்று கொண்டிருந்துள்ளார்.அப்போது,அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் தினேஷ் மீது மோதியதில்  பலத்தகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அறிந்த  தினேஷ் உறவினர்கள் சுமார் 200 பேர் தினேஷ் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அந்தியூர் போலீஸ் எஸ்.ஐ., ஆனந்த குமார் மற்றும் போலீசார் தினேஷ் உறவினர்களிடம் பேச்சு நடத்தினர். இதில் விபத்தை ஏற்படுத்திய வாகன டிரைவரை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என  கோரிக்கை விடுத்தனர்.  இதையடுத்து போலீசார் இது சம்பந்தமாக அந்தியூர், பவானி, அம்மாபேட்டை பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகிறோம். கூடிய விரைவில் விபத்து ஏற்படுத்தி சென்ற வாகன டிரைவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, முற்றுகையை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: