வீல்சேர் கூடைப்பந்து போட்டியில் மகாராஷ்டிரா அணி வெற்றி

ஈரோடு, செப். 25:  அகில இந்திய அளவில் நடந்த வீல்சேர் கூடைப்பந்து போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் மகாராஷ்டிரா அணிகள் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பரிசுகளை வழங்கினார்.

   அகில இந்திய வீல்சேர் கூடைப்பந்து கழகத்தின் சார்பில் மாற்றுதிறனாளிகளுக்கான 22வது வீல்சேர் கூடைப்பந்து போட்டி ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில், 18 மாநிலங்களில் இருந்து 29 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் மகாராஷ்டிரா அணியும், தமிழ்நாடு அணியும் மோதியது. இதில் இரு பிரிவுகளிலும் மகாராஷ்டிரா அணிகள் வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் மகாராஷ்டிரா அணி முதலிடத்தையும், தமிழ்நாடு அணி 2வது இடத்தையும், கேரளா அணி 3வது இடத்தையும், உத்தரபிரதேச அணி 4வது இடத்தையும் பிடித்தது.

  சிறந்த விளையாட்டு வீராங்கனையாக தமிழ்நாடு அணியை சேர்ந்த கனகலட்சுமி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல ஆண்கள் பிரிவில் மகாராஷ்டிரா அணி முதலிடத்தையும், தமிழ்நாடு அணி 2வது இடத்தையும், பஞ்சாப் அணி 3வது இடத்தையும், தெலுங்கானா அணி 4வது இடத்தையும் பெற்றது. சிறந்த விளையாட்டு வீரராக தமிழக அணியை சேர்ந்த பார்த்தசாரதி தேர்வு செய்யப்பட்டார்.

 இந்நிகழ்ச்சிக்கு சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீல்சேர் கூடைப்பந்து கழக ஆலோசகர் மக்கள் ராஜன் வரவேற்றார். நேற்று முன்தினம் நடந்த பரிசளிப்பு விழாவில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

   இந்நிகழ்ச்சியில் எம்.சி.ஆர் நிறுவனங்களின் தலைவர் ராபி, தொழிலதிபர்கள் கண்ணன், அபிநீத்குமார் ஜெயின், வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகர், கப்பல்துறை தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினர் அமீர்கான், டாக்டர் ராமகிருஷ்ணன், உடற்கல்வி இயக்குநர் ரமேஷ், காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: