அந்தியூரில் டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

அந்தியூர், செப். 25: தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி ஊதிய உயர்வு மற்றும் ஊதிய நிலுவைத் தொகை வழங்காததை கண்டித்து டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 14 கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிகளில் 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும் டேங்க் ஆப்ரேட்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி ஊதிய உயர்வு மற்றும் ஊதிய நிலுவைத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து சங்க தலைவர் குப்புசாமி தலைமையில், ஒன்றிய செயலாளர் தவசீலன் முன்னிலையில் நேற்று அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இது குறித்து டேங்க் ஆப்ரேட்டர் மற்றும் துப்புரவு பணியாளர் சங்க மாநில தலைவர் சண்முகம் கூறியதாவது: அரசு ஆணைகள் அடிப்படை ஊதியம் மற்றும் நிலுவை தொகை வழங்கக் கோரி கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஆனால் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போது பாதியிலேயே வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் வெளியே சென்றுவிட்டார். துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர். எனவே நாங்கள் காத்திருப்பு போராட்டத்தில் தற்போது ஈடுபட்டுள்ளோம். மேலும் அரசாணையின்படி ஊதிய உயர்வு மற்றும் நிலுவை தொகைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  இதற்கிடையே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வெளியே சென்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளியுங்கள் என வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் மாநிலத் தலைவர் சண்முகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: