வரும் 2ம் தேதி நடக்கவுள்ள கிராமசபை கூட்டங்கள் மக்கள் பங்களிப்போடு நடத்த கோரிக்கை

விழுப்புரம், செப். 25: சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கங்காதுரை மற்றும் நிர்வாகிகள் ஆட்சியர் சுப்ரமணியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதியிலிருந்து ஊராட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததாலும் பல ஊராட்சிகளுக்கு ஒரு சிறப்பு அலுவலர் என்ற நிலை இருப்பதாலும் அடிப்படை வசதிகள் பெறுவதில் கூட பல சிக்கல்களை மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில்தான் கிராம உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படையாக இருக்கும் கிராமசபைகளில் மக்கள் அதிக அளவில் கலந்துகொண்டு தாங்கள் கோரிக்கைகளுக்கு உரிய வலுசேர்க்க வேண்டியது அவசியமாக உள்ளது.  வருகின்ற அக்டோபர் 2ம் தேதி மாவட்டத்தில் உள்ள 1099 ஊராட்சிகளிலும் நடக்கவுள்ள கிராம சபைக்கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன்னதாகவே மக்களுக்கு போதிய அறிவிப்பு கொடுக்க வேண்டும். நிகழ்ச்சிநிரலை மக்களுக்கு வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். குறைந்தபட்ச உறுப்பினர்கள் கலந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும். அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைக்க பற்றாளர் நியமிக்க வேண்டும். மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்ற அதிகாரிகள் நிராகரிக்காமல் நிறைவேற்ற வேண்டும். மக்கள் பங்களிப்போடு கிராமசபைக்கூட்டங்கள் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: