×

நீண்டதூரம் செல்ல முடியவில்லை டாஸ்மாக் கேட்டு கலெக்டரிடம் குடிமகன்கள் கோரிக்கை

விழுப்புரம், செப். 25:  விழுப்புரம் மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுபடி சாலையோரம் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்து தீப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி மாநகராட்சி, நகராட்சி பகுதியில் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி விழுப்புரம் நகர பகுதியில் மூடப்பட்ட பகுதிகளில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் சாலாமேடு பகுதியில் கடந்த வாரம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனிடையே தற்போது பாலாஜிநகர் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் 27வது வார்டு பாலாஜி நகரைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் விழுப்புரம் ஆட்சியரிடம் அளித்த மனுவில், எங்கள் பகுதி நகரின் மையப்பகுதியாக உள்ளது. இந்த இடத்தில் விநாயகர் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளன. தற்போது மகளிர் கல்லூரி கட்டுமானப்பணிகளும் நடந்து ெகாண்டிருக்கின்றன. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே ஆட்சியர் இந்த கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் கட்டபொம்மன்நகர் பகுதியில் திறக்கவுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதனிடையே வழுதரெட்டியைச் சேர்ந்த குடிமகன்கள், பொதுமக்கள் டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் நாங்கள் மது அருந்துவதற்கு சுமார் 5 கி.மீ தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நகரில் போக்குவரத்து அதிகம் உள்ள காரணத்தால் மது அருந்திவிட்டு வீடு திரும்பும்போது விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே 27வது வார்டு பகுதியில் டாஸ்மாக் கடை அமைய நாங்கள் விருப்பமாக உள்ளோம். சிலர் வேண்டுமென்றே பொதுமக்களை தூண்டி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி தங்களின் சுயலாபத்திற்காக கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்கின்றனர். இந்த கடை அமையும் பகுதி அரசு விதிகள், நிபந்தனைகளுக்குட்பட்டும், உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்படியும், பள்ளி, கல்லூரி, கோயிலில் இருந்து 500 மீட்டர் ெதாலைவில்தான் அமைகிறது. கட்டபொம்மன்நகர், பாலாஜிநகரில் கடை அமையும் 500 மீட்டர் தூரத்திற்கு அப்பால்தான் குடியிருப்புகள் உள்ளன. இவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. எனவே இந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறந்தால் எங்களுக்கு வீண் அலைச்சல் குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை