மரக்காணம்- திண்டிவனம் வழித்தடத்தில் இரவு நேரங்களில் அரசு பஸ்கள் இயங்காததால் மக்கள் பாதிப்பு

மரக்காணம், செப். 25: மரக்காணம்- திண்டிவனம் வழித்தடத்தில் இரவு 8 மணிக்கு மேல் அரசு பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் படியில் ஆபத்தான பயணம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் ேபருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.மரக்காணம்- திண்டிவனம் சாலையில் கந்தாடு, சிறுவாடி, ஆலங்குப்பம், பிரம்மதேசம், வடகோட்டிப்பாக்கம், வடநெற்குணம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். இவர்கள் இப்பகுதியில் இருந்து சென்னை, புதுவை உள்ளிட்ட வெளியிடங்களுக்கு செல்லவேண்டும் என்றால் மரக்காணம்- திண்டிவனம் வழியாகத்தான் செல்ல வேண்டும். இதுபோல் இப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சாதிசான்று, குடியிருப்பு, வருமானம் மற்றும் நிலம் சம்பந்தமான ஆவணங்கள் வாங்கவேண்டும் என்றால் திண்டிவனம், மரக்காணம் ஆகிய இடங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்குதான் செல்ல வேண்டும். இதன் காரணமாக தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பேருந்துகள் மூலம் பயணம் செய்கின்றனர். ஆனால் இந்த வழித்தடத்தில் நான்கு அரசு டவுன் பேருந்துக்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த டவுன் பஸ்களும் அமாவாசை, பவுர்ணமி போன்ற காலங்களிலும், அரசு முக்கிய பண்டிகை காலங்களிலும் இந்த வழித் தடத்தில் இயக்காமல் வேறு இடங்களுக்கு மாற்றி அனுப்பப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் இந்த வழித் தடத்தில் இப்பேருந்துகள் மாதத்தில் பல நாட்கள் இயக்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் குறை கூறுகின்றனர். இதிலும் இரவு 8 மணிக்குமேல் இந்த வழிதடத்தில் அரசு பஸ்சுகள் இயக்கப்படுவதே இல்லை என்றும் கூறுகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் பகல் நேரங்களில் ஷேர் ஆட்டோக்கள் மூலமே அதிகளவில் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதுபோல் இப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ்கள் இருந்தும் குறித்த நேரத்தில் அரசு பேருந்துகள் வராததால் காசுகொடுத்து ஷேர் ஆட்டோ மூலம் பயணம் செய்கின்றனர். மேலும் ஒரு சில நாட்களில் மட்டும் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் ஏறுகின்றனர். இவர்கள் பேருந்தில் போதிய இட வசதி இல்லாததால் பேருந்தின் பக்கவாட்டில் மற்றும் படிகளில் தொங்கியவாறு பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். எனவே இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி மரக்காணம்-திண்டிவனம் வழிதடத்தில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களை நிறுத்தாமல் குறித்த நேரத்தில் முறையாக இயக்க வேண்டும். மேலும் இந்த வழிதடத்தில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: