ஊரைவிட்டு வெளியேறிய போலி சாமியார் குடும்பம்

நெட்டப்பாக்கம்,  செப். 25: வில்லியனூர், கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அசோக்ராஜ்.  இவரது மனைவி கிருஷ்ணவேணி கடந்த 19ம்தேதி இரவு படுகொலை செய்யப்பட்டு  கிடந்தார். அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக  வில்லியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர்  அப்பகுதியைச் சேர்ந்த போலி சாமியார் கோவிந்தராஜை தனிப்படை அதிரடியாக கைது  செய்தது. விசாரணையில் தோஷம் கழிப்பதாக கூறி, கிருஷ்ணவேணியிடம் நகை  பறிக்க அவரை சிறப்பு பூஜைக்கு அழைத்து நம்ப வைத்து கழுத்தை அறுத்து கோவிந்தராஜ் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் வீட்டின் அருகே  மறைத்து வைத்திருந்த கொலைக்கு பயன்படுத்தி கத்தி, 13 பவுன் நகைகளை போலீசார்  பறிமுதல் செய்தனர். இதனிடையே கரிக்கலாம்பாக்கத்தில் கிருஷ்ணவேணியின்  உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், நேற்றுமுன்தினம் போலி சாமியார் வீட்டை  கைப்பற்றக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவல்  கிடைத்து வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். எஸ்பியிடம் மனு  அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் அனைவரும் கலைந்து  சென்றனர். இதற்கிடையே பொதுமக்களின் நெருக்கடிக்கு பயந்து போலி சாமியார்  கோவிந்தராஜ், குடும்பத்தினர் தற்காலிகமாக வீட்டை காலி செய்து ஊரைவிட்டு  வெளியேறி உள்ளனர்.

 தற்போது உறவினர்கள் வீட்டில் கோவிந்தராஜ் மனைவி  மற்றும் குழந்தைகள் தஞ்சமடைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் கோவிந்தராஜ்  வீடு பூட்டிய நிலையில் கிடக்கிறது. இதற்கிடையே கோவிந்தராஜை நீதிமன்ற  ஜாமீனில் வெளியே கொண்டு வருவது தொடர்பாக அவரது உறவினர்கள் வழக்கறிஞர்களிடம்  ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: