ஜிப்மரில் மகப்பேறு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் துவக்கம்

புதுச்சேரி, செப். 25: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் மகப்பேறியல் மற்றும் மாதர் நோய் துறையில் பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைத் துறைகளை போல புதியதாக வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவில் இரண்டு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற நோயாளிகளுக்கான நேரம் காலை 7.30 முதல் மதியம் 2 மணி வரை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் செயல்படுகிறது. நோயாளிகள் பதிவு சீட்டை காலை 10 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு சிகிச்சை பிரிவுகளில் இவ்விரண்டு நாட்களில் குறைவான நோயாளிகள் இருப்பதால் நோயாளிகள் சிகிச்சை பெற்று விரைவில் வீடு திரும்ப முடியும். கூடுதலாக, மாதவிடாய் நின்ற பெண்களுக்காக ஒவ்வொரு புதன்கிழமை மதியம் 2 மணி முதல் 4 மணி வரை விஷேச சிகிச்சை பிரிவு `மெனோபாஸ் கிளினிக்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை வளர் இளம் பருவத்தினருக்கான (10 வயது முதல் 19 வயது வரை) `இளம் பருவ சிகிச்சை பிரிவு’ துவங்கப்பட்டு செயல்படுகிறது. இப்பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் தங்களது வழக்கமான சிகிச்சை பிரிவுக்கு  செல்லாமல் மேற்கூறிய விஷேச சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை  பெறலாம். இப்புதிய விஷேச சிகிச்சை பிரிவுகள் நோயாளிகளின் சிறந்த கவனிப்பிற்காகவும் மற்றும் கூட்டநெரிசலை குறைப்பதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 0413 - 2298122 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: