புன்னக்காயலில் முறையாக ரீடிங் எடுக்கவராத மின்ஊழியர்களால் அபராதம்

தூத்துக்குடி, செப். 25: புன்னக்காயல் கடற்கரையோர பகுதிகளில் முறையாக ரீடிங் எடுக்க வராத மின் ஊழியர்களால் அபராதம் செலுத்தி அவதிக்கு உள்ளாவதாக கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 இதுதொடர்பாக புன்னக்காயல் ஊர் நிர்வாக கமிட்டி தலைவர் செல்டன், ஒருங்கிணைப்பாளர் யுஜின் தலைமையில் ஊர் மக்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கொடுத்துள்ள புகார் மனு விவரம்:  கடற்கரையோரம் அமைந்துள்ள எங்கள் கிராமத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மீன்பிடி தொழிலையே நம்பி வாழ்ந்துவரும் எங்கள் ஊருக்கு என்று மின்பணியாளர்கள் இல்லை. மின்கட்டண அளவினை குறிப்பதற்கு கூட மாதம்தோறும் மின் கணக்கீட்டாளர்கள் வருவதே இல்லை. இதனால் பொதுமக்கள் எப்போது மின்கட்டணம் செலுத்தவேண்டும், தங்களது வீடுகளுக்கான மின்கட்டணம் எவ்வளவு என்பதை அறியமுடியவில்லை. 5 மாதங்கள் ஆனாலும் மின் கணக்கீட்டாளர்கள் கணக்கு எடுக்க வருவதே இல்லை.இந்த குளறுபடியால் மின் கட்டணம் செலுத்த தவறும் நாங்கள் ரூ.250 மின்கட்டணத்திற்காக குறைந்தது ரூ.4ஆயிரம் வரை அபாரதத்துடன் மின் கட்டணத்தை செலுத்தி துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை பெறவேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகி கடுமையாக அவதிப்படுகிறோம்.  எனவே, இதுவிஷயத்தில்  உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் ஊருக்கு தனியாக மின் பணியாளரை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: