விளாத்திகுளத்தில் தற்காலிக தாலுகா அலுவலகம் திறப்பு

விளாத்திகுளம், செப். 25: விளாத்திகுளத்தில் தற்காலிக தாலுகா அலுவலகத்தை கோவில்பட்டி ஆர்டிஓ விஜயா திறந்துவைத்தார். விளாத்திகுளம்  பஸ் நிலையம் அருகே வேம்பார் சாலையில் செயல்பட்டு வந்த தாலுகா அலுவலக கட்டிடம், பல ஆண்டுகளாக முறையாக  சீரமைக்கப்படாததால் சேதமடைந்தது. அவ்வப்போது கான்கிரீட் மேற்கூரைகள் இடிந்து  விழுந்தன. மேலும் கட்டிடத்தின்  மேற்கூரை இடிந்துவிழும் அபாயம் நிலவியது. இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியானது. இதையடுத்து பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, அலுவலகத்தை தற்காலிக கட்டிடத்திற்கு மாற்றுமாறு   உத்தரவிட்டார். இதுகுறித்து தாசில்தார் ராஜ்குமார், அனைத்துக்கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பினருடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில்  மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் முன்புறமாக உள்ள தனியார் திருமண மண்டப கட்டிடத்தில் தற்காலிக தாலுகா அலுவலகத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி தற்காலிக தாலுகா அலுவலக கட்டிடத்தை கோவில்பட்டி ஆா்டிஓ விஜயா நேற்று திறந்துவைத்தார். விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மண்டல துணை தாசில்தார்கள் நிஷாந்தினி, சுஷிலா, தேர்தல்  துணை தாசில்தார் கிருஷ்ணகுமார், விஏஓக்கள் உள்ளிட்ட அனைத்துத் துறையினர் பங்கேற்றனர். இந்த தற்காலிக கட்டிடத்தில்  தாசில்தார் பிரிவு, குடிமையியல் பிரிவு, நிலஅளவை பிரிவு, சமூக பாதுகாப்பு  திட்ட பிரிவு, தேர்தல் பிரிவு உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களும்  இன்று முதல்  செயல்பட உள்ளன.

Related Stories: