கன்னடியன் வெள்ளக் கால்வாயுடன் மணிமுத்தாறு 3வது ரீச் கால்வாய் இணைப்பு

சாத்தான்குளம், செப். 25: கன்னடியன் வெள்ளக்கால்வாய் திட்டத்தில் மணிமுத்தாறு 3வது ரீச் கால்வாயை இணைக்க வேண்டும் என  நாகர்கோவில் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சாத்தான்குளம் பகுதி விவசாயிகள் மனு அளித்தனர்.  சாத்தான்குளம் பகுதி பகுதி வானம் பார்த்த பூமியாகவும்,  மழை மறைவு பிரதேசமாக உள்ளது. இப்பகுதியில் ஆற்றுப்பாசனம் இல்லாதால் குளம் மற்றும் கிணற்று பாசனம் மூலமே விவசாயம் நடந்து வருகிறது. இதுதவிர மணிமுத்தாறு 3வது ரீச் கால்வாய் மூலமும் பாசன வசதி பெறும் நிலை உள்ளது. தற்போது மழை காலங்களில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை  இப்பகுதிக்கு திரும்பி விடும் வகையில் கன்னடியன் வெள்ளக்கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டு மூலக்கரைப்பட்டி வரை பணி முடிந்துள்ளது. இந்நிலையில் நாகர்கோவிலுக்கு வருகை புரிந்த  முதல்வர் எடப்பாடிபழனிசாமியை  சாத்தான்குளம் வட்டார விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்து மக்கள் நல அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்து மனு அளித்தனர், அதில் புத்தன்தருவை குளம் நிரப்பும் வரை சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர வேண்டும். மருதூர் அணைக்கட்டு உயரத்தை அதிகரிக்க வேண்டும். கால்வாய் குளத்தின் கரையை உயர்த்தி உள்வாங்கி மடைகள் அமைப்பதோடு மதகுகளின் எண்ணிக்கையை 10 ஆக அதிகரிக்க வேண்டும். வெள்ளக்கால்வாயுடன் மணிமுத்தாறு 3வது ரீச் கால்வாயை இணைக்க வேண்டும். நடப்பாண்டில் திறக்கப்படும் 3 மற்றும் 4வது மணிமுத்தாறு ரீச் தண்ணீர் எம்பகுதி கடைமடை வரை கிடைக்க ஏதுவாக கிளைக் கால்வாயை தூர்வார வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றித்தருவதாக முதல்வர் உறுதியளித்தார். அப்போது  அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுக மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன், சாத்தான்குளம் வர்த்தகர் சங்கத் தலைவர் துரைராஜ், படுக்கப்பத்து விவசாய சங்கச் செயலாளர் சரவணன், பொத்தக்காலன்விளை திருச்செந்தூர் தென்பகுதி விவசாய சங்கச் செயலாளர் பொன் திரவியராஜ், தாமிரபரணி- கருமேனியாறு -நம்பியாறு எம்எல்தேரி இணைப்பு கால்வாய்ப்பகுதி விவசாய சங்கத்தினர், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பால்துரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: