மலைப்பகுதியில் பலத்த மழை குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தென்காசி, செப்.25:  குற்றாலம் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. குற்றாலத்தில் செப்டம்பர் மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் வெயிலடித்து வந்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் சுமார் அரை மணி நேரம் பெய்த மழையின் காரணமாக கடந்த 20ம் தேதி அருவிகளில் தண்ணீர் விழுந்தது. ஆனால் இரண்டே நாட்களில் தண்ணீர் வரத்து  வெகுவாக குறைந்து விட்டது. இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் குற்றாலத்திற்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனையடுத்து நேற்று காலை முதல் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து அதிரித்தது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுந்தது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் ஓரளவு நன்றாக தண்ணீர் விழுந்தது. பழையகுற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் கொட்டியது. சுற்றுலா பயணிகள் கூட்டம் சுமாராக இருந்தது.

Related Stories: