புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு தென்காசி பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

தென்காசி, செப்.25: தென்காசி பொருந்தி நின்ற பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சத்யநாராயண பூஜை வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி ஆனைப்பாலம் அருகில் உள்ள பொருந்தி நின்ற பெருமாள் கோயிலில் மாதம் தோறும் பவுர்ணமி தினத்தன்று தென்காசி நகர இந்து முன்னணி மற்றும் இந்து ஆட்டோ ஓட்டுனர் முன்னணி சங்கம் சார்பில் சத்யநாராயண பூஜை வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்த மாதம் சத்யநாராயண பூஜை நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காலையில் பொருந்தி நின்ற பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் வேட்டைக்காரன்குளம் அய்யா கோயில் மூலம் வழங்கப்பட்ட நாகர் வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி முன்பு ஏராளமான பக்தர்கள் பஜனை நடத்தினர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பூஜைகளை சுந்தரராஜன், வரதராஜன் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினர். அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் வக்கீல் குமார்பாண்டியன், இந்து முன்னணி நகர தலைவர் இசக்கிமுத்து, பொது செயலாளர் நாராயணன், ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் முருகன், செயலாளர் கோமதிசங்கர், துணைத்தலைவர் மாரியப்பன், ராஜ் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories: