டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் அதிகாரிகளுடன் சப் கலெக்டர் ஆய்வு வேலூர் ஓல்டுடவுனில் 2 பேருக்கு டெங்கு அறிகுறி

வேலூர், செப்.25: வேலூர் ஓல்டு டவுனில் இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தொடர்பாக வெளியான தகவலை அடுத்து அங்கு சப் கலெக்டர் மற்றும் மாநகராட்சி நகர்நல அலுவலர் தலைமையிலான குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். பருவமழை சீசன் தொடங்கியுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து தீவிர கொசு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், வேலூர் ஓல்டு டவுன் துரைசாமி மேஸ்திரி தெருவில் 2 பேருக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்தனர். இவர்களுக்கு டெங்குவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் டெங்கு காய்ச்சல் இல்லை என்றும், சாதாரண வைரஸ் காய்ச்சல் என்றும் தெரிய வந்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு தற்போது அவர்கள் குணமடைந்து வருகின்றனர்.இதையடுத்து ஓல்டு டவுன், கலாஸ்பாளையம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் நேற்று காலை சப் கலெக்டர் மெக்ராஜ், மாநகராட்சி நல அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பொதுமக்கள் மத்தியில் டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள், படங்கள் அடங்கிய நோட்டீஸ்களை வினியோகித்தனர்.

அத்துடன் இரண்டு பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டதுடன், தண்ணீர் நிரம்பிய தொட்டிகளில் அபேட் கரைசல் தெளிக்கப்பட்டது. அதேபோல் வேலூர் சேண்பாக்கம் பகுதியிலும் வீடு, வீடாக சென்று உதவி கலெக்டர் மெக்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாநகர் நல அலுவலர் மதிவாணன், சுகாதார ஆய்வாளர் சிவகுமார் உட்பட பலர் சென்றனர்.இதுதொடர்பாக சப் கலெக்டர் மெக்ராஜிடம் கேட்டபோது, ‘துரைசாமி மேஸ்திரி தெருவில் 2 பேருக்கு டெங்குவாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் டெங்கு இல்லை என்று தெரிய வந்தது. அவர்கள் தற்போது குணமடைந்துள்ளனர்.அதேநேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓல்டு டவுன் பகுதி முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடித்தல், மருந்து தெளித்தல், மாஸ் கிளீனிங் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன’ என்றார்.

Related Stories: