திருமுருகன் காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு வேலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை

வேலூர், செப்.25: திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு, வேலூர் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிய திருமுருகன் காந்தியை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். பின்னர், தமிழக போலீசாரிடம் திருமுருகன் காந்தி ஒப்படைக்கப்பட்டார்.தற்போது, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு கடந்த 2 நாட்களாக வயிற்றுப்போக்கு, மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்காக, சிறையில் உள்ள டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் அவருக்கு வயிற்றுப்போக்கு குணமாகாததால், நேற்று முன்தினம் வாந்தியுடன் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு அல்சர் பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து திருமுருகன் காந்திக்கு முழு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.அதன்படி, வேலூர் சிறையில் இருந்து திருமுருகன் காந்தியை வேலூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணி தலைமையிலான போலீசார் நேற்று கா வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு காலை 10 மணியளவில் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்கேன் உள்ளிட்ட 7 பிரிவுகளில் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.பின்னர், மதியம் 1 மணிக்கு மருத்துவமனையில் இருந்து வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘சிறையில் என்னை யாருடனும் பேசக்கூடாது. யாரையும் சந்திக்கக் கூடாது என்று தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்’ என்றார். இந்நிலையில், மருத்துவ பரிசோதனை முடிவுகளை அடிப்படையாக கொண்டு, தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Stories: