×

ரூ.15 லட்சம் செலவில் பெரும்பள்ளம் ஓடையை தூர்வாரும் பணி துவக்கம்

 ஈரோடு,செப்.21: பெரும்பள்ளம் ஓடையை இரண்டாவது முறையாக ரூ.15 லட்சம் செலவில் தூர்வாரும் பணி நேற்று துவங்கியது. கீழ்பவானி வாய்க்காலின் முக்கிய கசிவு நீர் திட்டமாக சூரம்பட்டி அணைக்கட்டு விளங்குகிறது.அணைக்கட்டில் இருந்து பெரும்பள்ளம் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பாசனத்திற்கு கடந்த காலங்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. 2,450 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வந்த நிலையில், அணைக்கட்டு தூர்வாரப்படாததாலும், கழிவு நீர் தேங்கியதாலும் பல ஆண்டுகளாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாமல் போனது. இதையடுத்து, ஈரோடை என்ற தொண்டு அமைப்பின் மூலம் சூரம்பட்டி அணைக்கட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 33 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டது. இதன் பயனாக இந்தாண்டு வாய்க்கால் பாசனத்திற்கு அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அணைக்கட்டின் கீழ்பகுதியான பெரும்பள்ளம் ஓடையானது திட மற்றும் திரவக்கழிவுகளால் நிரம்பி கிடக்கின்றது. ஈரோடு மாநகர எல்லைக்குள் ஓடும் இந்த ஓடையால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மேலும் ஓடையில் செல்லும் கழிவுகள் அனைத்தும் காவிரி ஆற்றில் நேரடியாக கலப்பதால் காவிரி தண்ணீரும் மாசு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையில் ஈரோடை அமைப்பின் சார்பில் ரூ.15 லட்சம் செலவில் 2 வது முறையாக தூவாரும் பணியை நேற்று கலெக்டர் கதிரவன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஈரோடை அமைப்பின் தலைவர் டாக்டர் சுதாகர், தொழிலதிபர்கள் சின்னசாமி, குமார், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சுப்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...