×

பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த 8,260 புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

ஈரோடு, செப். 21: ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணி நேற்று நடந்தது. இந்த பணியினை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் கதிரவன் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது கலெக்டர் கதிரவன் கூறுகையில், தேர்தல் ஆணையம் பெங்களூரு பெல் நிறுவனம் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் புதியதாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 5 ஆயிரத்து 350 மற்றும் 2 ஆயிரத்து 910 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் என 8 ஆயிரத்து 260 புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெறப்பட்டுள்ளது.

 இந்த புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொல்லம்பாளையத்தில் உள்ள ரயில்வே காலனி மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.வாக்காளர்கள் தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில் விவிபேட் இயந்திரமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கம்ப்யூட்டர் மூலமாக வேட்பாளர்களின் சின்னம், வரிசை எண் ஆகியவை விவிபேட் இயந்திரத்தில் பதிவு செய்யப்படும். வாக்காளர் வாக்குப்பதிவு இயந்திரத்தின் பார்வை இடத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்ற விபரம் தாள் வடிவில் ஒரு சில மணித்துணிகள் வந்து நிற்கும். பின்பு உடனடியாக சேமிப்பு கலனுக்குள் சென்று விடும்.
 மேலும் கருவியில் வரும் ரசீதை பொதுமக்கள் யாரும் தொடவோ, எடுக்கவோ இயலாது. ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் தனி பெட்டியில் சீல் வைக்கப்படும். ஓட்டு எண்ணிக்கைக்கு இந்த விவிபேட் இயந்திரம் உபயோகப்பட மாட்டாது எனத் தெரிவித்தார். இதில் தேர்தல் பிரிவு தாசில்தார் ரவிச்சந்திரன் உட்பட பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்