×

நூல் விலை உயர்ந்ததால் இலவச வேஷ்டி, சேலை தயாரிப்பு பணி தொய்வு

ஈரோடு,  செப்.21: நூல்விலை உயர்ந்ததால் இலவச வேஷ்டி, சேலை உற்பத்திக்கு நுால் வரத்து  குறைந்துள்ளது.இதனால் உற்பத்தி பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில்  ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது இலவச வேஷ்டி சேலை ரேஷன்  கடை மூலமாக வழங்கப்படுகிறது. இதனால், லட்சக்கணக்கான விசைத்தறி  நெசவாளர்கள் பயன்பெறுகின்றனர். நடப்பாண்டு இலவச வேஷ்டி,  சேலை திட்டத்திற்கு ரூ.520 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை கொண்டு தமிழகம்  முழுவதும் 1.5கோடி சேலை, 1.5கோடி வேஷ்டி உற்பத்தி செய்ய ஆர்டர்  வழங்கப்பட்டுள்ளன.  இதற்கான தயாரிப்பு பணி, ஈரோடு, திருப்பூர், கோவை,  திருச்செங்கோடு, விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில்  வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 46 விசைத்தறி கூடங்களில்  15ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் இலவச வேஷ்டி, சேலை  தயாரிக்கப்படுகிறது.

 இந்த உற்பத்தி பணி அனைத்தும் டிசம்பர் மாத  இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நுால் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதில் நூல்  கொள்முதல் செய்ய அரசு டெண்டர் தொகையாக கிலோவிற்கு 161ரூபாயை நிர்ணயம்  செய்துள்ளது. ஆனால் தற்போது பல்வேறு ரக நூல்கள் விலை உயர்ந்து வெளி  மார்க்கெட்டில் நூல் 180 ரூபாய் முதல் 200ரூாய்க்கு மேல் விற்பனையாகிறது. இதனால் நுால் வரத்தும் படிப்படியாக குறைந்துள்ளது.   இந்த மாதம் தமிழகம் முழுவதும் 350 டன் நூல் வரவேண்டிய நிலையில்,  தற்போது 125 டன் மட்டுமே வந்துள்ளது. இதில் ஈரோட்டிற்கு 40 டன்,  திருச்செங்கோட்டிற்கு 40 டன், கோவைக்கு 10 டன் வழங்கப்பட்டுள்ளது.

 மீதமுள்ள நூல்கள்  விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. இதில் குறைந்தளவிலான நூல்கள் வந்துள்ளதால் இலவச வேட்டி  சேலை தயாரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
 இதுகுறித்து கைத்தறி  மற்றும் துணி நூல் துறை அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 46 விசைத்தறி சொசைட்டிகள்  மூலம் இலவச வேஷ்டி, சேலை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது நூல்  விலை உயர்வின் காரணமாக, அரசு நிர்ணயித்த டெண்டர் விலையில் நூல்களை  கொள்முதல் செய்ய முடியவில்லை. இதனால் இந்த மாதம் தயாரிப்புக்கு  தமிழகம் முழுவதும் 350 டன் நூல்கள் வரத்தாக வேண்டும். ஆனால் தற்போது 125  டன் மட்டுமே வந்துள்ளது.இதனால் உற்பத்தி பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பிரச்னைக்கு இன்னும் ஒரு சில நாட்களில் தீர்வு காணப்பட்டு  விடும். டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து உற்பத்தி பணிகளும்  முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு