அவிநாசி சாலையில் எக்ஸ்பிரஸ் வே மேம்பால பணிகள் தாமதம்

கோவை, செப்.21: கோவை மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) சார்பில் அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் பீளமேடு ஏர்போர்ட் சந்திப்பு ரோடு வரை எக்ஸ்பிரஸ் வே என்ற பெயரில் உயர் மட்ட மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடிந்து, 15 இடங்களில் மண் ஆய்வு பணியும் நடந்தது. அடுத்த 2 ஆண்டுகளில் 9.6 கி.மீ தூரத்திற்கான மேம்பாலத்தை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 4 வழிப்பாதையாக இந்த மேம்பாலம் அமைக்க, தற்போதுள்ள ரோட்டின் மீது இந்த மேம்பாலத்தை உருவாக்க முடிவு எடுக்கப்பட்டது. அண்ணா சிலை, லட்சுமி மில்ஸ், பி.எஸ்.ஜி டெக், மசக்காளிபாளையம் ரோடு சந்திப்பு, ஹோப் காலேஜ், கொடிசியா, ஏர்போர்ட் வரை மேம்பாலத்தில் இருந்து சந்திப்பு ரோடுகளுக்கு சென்று வர இறக்கை பாதை அமைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

கோவை நகரில் இது ஹைடெக் மேம்பாலமாக அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். சிக்னல் இல்லாமல் எந்த இடத்திலும் வாகனங்களை நிறுத்தாமல் வாகனங்களில் பயணம் செய்யும் வகையில் இந்த மேம்பாலம் வடிவமைக்கப்பட்டது. கோவை நகரின் பிரமாண்ட மேம்பாலம் என்ற அடையாளத்துடன் இந்த மேம்பாலத்தை கட்டமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மண் ஆய்வு செய்து பணிக்கான டெண்டர் விடப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் டெண்டர் விடுவது கடந்த 8 மாதமாக இழுபறி நிலையில் இருக்கிறது. மேம்பால டிசைனில் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக பிரதான ரோட்டில் இருந்து பிரிந்து செல்லும் கிளை ரோடுகளில் வாகனங்களின் இயக்கம், மேம்பாலம் அமைத்தால் முக்கியமான கட்டடங்களை இடிப்பது தொடர்பாகவே டிசைனில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. பல்வேறு கட்டுமானங்களின் உரிமையாளர்கள் டிசைன் மாற்றம் செய்ய அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக நிதி ஒதுக்கீடு செய்த பின்னரும் டெண்டர் விட்டு பணி நடத்த முடியாமல் முடக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

 இது தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) துறையினர் கூறுகையில், ‘‘ மேம்பால பணிக்கான டிசைன் இதுவரை இறுதி ெசய்யப்படவில்லை. இந்த ஆண்டிற்குள் டிசைன் இறுதி செய்யப்படுமா எனவும் சொல்ல முடியாத நிலையிருக்கிறது. டிசைன் முடிவு செய்தால் தான் டெண்டர் விட முடியும். மெட்ரோ ரயில் திட்டத்திற்காக அவிநாசி ரோடு அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் மேம்பாலம் கட்டும் தகவலை தெரிவித்திருக்கிறோம். மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை. டிசைன் இறுதி செய்து அனுமதி பெற்றால் மட்டுமே மேம்பால டெண்டர் விடப்படும், ’’ என்றனர்.

Related Stories: