34,774 ரேஷன் கடை காலவரையின்றி மூடல்

கோவை, செப்.21: அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில பொது செயலாளர் ஜெயசந்திரராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 34,774 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. இதில் 32,500 கடைகள் கூட்டுறவு சங்கத்தின் கட்டுபாட்டில் உள்ளது. ரேஷன் கடை பணியாளர்களின் கோரிக்கைகள் பல ஆண்டாக நிறைவேற்றப்படவில்லை. ரேஷன் கடைகளுக்கு மொத்த ஒதுக்கீட்டில் 80 சதவீத அரிசி, 70 சதவீத பாமாயில், 90 சதவீத துவரம்பருப்பு மட்டுமே வழங்கப்படுகிறது.  பொதுமக்களுக்கு முழுமையாக உணவு பொருட்களை பணியாளர்களால் வழங்க முடியாத நிலையிருக்கிறது. கடைகளில் ஆய்வு நடத்தி ஊழியர்களை பழி வாங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கிறார்கள். நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு இணையான சம்பளம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

 பணி வரன் முறை, ஓய்வூதியம், சரியான எடையில் உணவு பொருட்கள் வழங்கவேண்டும், சேதார கழிவு வழங்கவேண்டும், சுமார் 4 ஆயிரம் பணியாளர்களுக்கு பணி வரன் முறை செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. எங்களின் கோரிக்கைகள் இதுவரை ஏற்கப்படவில்லை.  கருப்பு கொடி போராட்டம், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், சென்னையில் பேரணி நடத்தி மனு கொடுத்து போராட்டம் நடத்தியும் பலனில்லாமல் போய் விட்டது. பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் 24 சதவீத தொகை பி.எப் அலுவலகத்தில் செலுத்துவதில்லை. பணி ஓய்வு பெறுபவர்கள் எந்த பண பலனும் பெற முடியாத நிலையிருக்கிறது. சரியான ஊதியம் பெற முடியாத நிலையில் ஊழியர்கள் தவிக்கிறார்கள். எங்களது 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி மாநில அளவில் 34,774 ரேஷன் கடைகளை மூடி காலவரையின்றி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: