ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுவிக்க வேண்டும்

கோவை, செப். 21:  தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகமாநில தலைவர் ஜவாஹிருல்லா கோவையில்நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசால் முத்தலாக் சட்டம் அவசர கோலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் பொறுமையின்மையை காட்டுகிறது. மாநிலங்களவையில்  நிறைவேற்ற முடியாததை சட்டமாக்கி இருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இது முஸ்லீம் மக்களை சீர்குலைக்கும் செயலாகும். இந்த சட்டம் முஸ்லீம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காது. பெண்களின் பாதுகாப்பிற்கு எதுவும் செய்யாத மத்திய அரசு, முஸ்லீம் மக்கள் மீது விரோத போக்கை காட்டுகிறது. கோவையில் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் யூகங்களின் அடிப்படையில் அவர்களை உபா சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சட்டத்தில் பாஜ., தேசிய செயலாளர் எச்.ராஜாவை தான் கைது செய்ய வேண்டும். அவர் தான் நீதித்துறை, காவல்துறையை மோசமாக பேசி வருகிறார். ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேர் விடுதலையில் கவர்னர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.  நூறு சதவீத ஊழல் ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி உள்ளது. ஊழல் விசாரணை முறையாக நடக்க அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். வரும் அக்டோபர் 7ம் தேதி தமுமுக சார்பில் திருச்சியில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு நடக்கிறது. இதில், தோழமை கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

Related Stories: