சத்துணவு ஊழியர் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுப்பு

ஊட்டி, செப்.21: கோரிக்கைளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் பேரணியாக செல்ல போலீசார் அனுமதி அளிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோரிக்கை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு கோஷம் எழுப்பினார்கள். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்பபாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

நீலகிரி மாவட்டத்தில் இதற்காக ஏராளமான சத்துணவு ஊழியர்கள் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கூடினார்கள். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஏ.டி.சி., சுதந்திர திடல் வரை பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் சத்துணவு ஊழியர்கள் பேரணிக்கு அனுமதி கிடையாது. மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் எனவும், எனவே கோஷம் எழுப்பி விட்டு கலைந்து செல்லுங்கள் என அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அவர்கள் கூடி கோரிக்கைகளை விளக்கி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஜி1 இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சத்துணவு ஊழியர்களை உடனடியாக கலைந்து செல்லுமாறு கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிர்வாகிகள், எங்களது கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசி கொண்டிருக்கிறோம். அதற்கு அனுமதிக்க வேண்டும் என்றனர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு சத்துணவு ஊழியர்கள் சிறிது நேரம் கோரிக்கை விளக்கி பேசிய பின்பு, கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: