கேர்ன்ஹில் வனத்தில் தொங்கு பாலம் பழுது சீரமைக்க கோரிக்கை

ஊட்டி, செப். 21: ஊட்டி கேர்ன்ஹில் பகுதியில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொங்கும் பாலம் உடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   நீலகிரி கோட்ட வனத்துறை சார்பில் ஊட்டி அருகே உள்ள கேர்ன்ஹில் வனப்பகுதியில் பல்நோக்கு கட்டிடம் உள்ளது. இக்கட்டிடத்தில் வனப்பகுதியின் மாதிரி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பறவைகள், வன விலங்குகளின் ஒலிகள் அடங்கிய தொகுப்பும் உள்ளது.  சிறுத்தை, மான், காட்டெருமை, அணில், புலி உள்ளிட்ட வன விலங்குகளின் மாதிரி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வனத்திற்குள் சுற்றுலா பயணிகள் நடைபயணம் மேற்கொள்ளும் வசதியும் உள்ளது. சிறப்பம்சமாக மரங்களுக்கு நடுவே தொங்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் ஏறி நடந்து சென்று பார்த்து மகிழ்வது வழக்கம். மேலும் வனத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையமும் அமைந்துள்ளது. கேர்ன்ஹில் வனத்தில் உள்ள தொங்கு பாலம் மற்றும் வன விலங்குகளின் மாதிரிகளை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். இதனிடைேய கேர்ன்ஹில் பகுதியில் மரங்களின் மீது அமைக்கப்பட்டுள்ள தொங்கும் பாலத்தின் அடிப்பகுதியில் சில இடங்களில் உடைந்து இடைவெளி ஏற்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் போது விபத்துகள் ஏற்பட கூடிய அபாயம் ஏற்படும் என்பதால் தொங்கும் பாலம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.   இதனால் சுற்றுலா பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் மகிழ்விக்கும் வகையில் தொங்கு பாலத்தில் ஏற்பட்டுள்ள சிறு சிறு பழுதுகளை நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: