உடுமலை நகராட்சியில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு சீல்

உடுமலை,செப்.21: உடுமலை நகராட்சிக்கு சொந்தமான மத்திய பேருந்து நிலையம் வெளிப்புறம் மற்றும் உள்புறம், ராஜேந்திரா ரோடு, பழனி ரோடு மினி மார்க்கெட், சத்திரம் வீதி வணிக வளாகம், சேர்மன் கனகராஜ் ரோடு வணிக வளாகம், குட்டை கரை வணிக வளாகம் ஆகியவற்றில் மாதாந்திர குத்தகை மற்றும் ஆண்டு குத்தகை அடிப்படையில் 250 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.4.65 கோடி வருவாய் வரவேண்டும். ஆனால் நடப்பு நிதியாண்டின் 6 மாத காலம் முடிந்த நிலையில் ரூ.1.36 கோடி மட்டுமே வசூலாகி உள்ளது. பல கடைக்காரர்கள் வாடகை செலுத்தாமல் தாமதம் செய்து வருகின்றனர். இதுபற்றி நகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தியும் கண்டுகொள்ளாததால், நேற்று அதிரடியாக சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.பழனி ரோடு மினி மார்க்கெட்டில் உள்ள 3 கடைகளுக்கு நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர்.வாடகை பாக்கி உள்ள அனைத்து கடைகளும் கண்டறியப்பட்டு படிப்படியாக சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: