தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது

உடுமலை,செப். 21: தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என அமமுக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டினார்.அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று மாலை உடுமலை பேருந்து நிலையம் முன்பாக திறந்த வேனில் நின்றபடி டிடிவி தினகரன் பேசியதாவது: தமிழகத்தில் இன்று நடந்து கொண்டிருக்கும் ஆட்சிக்கு காரணமானவர்களை மறந்து துரோக சிந்தனை உள்ளவர்கள் மக்கள் நலனை மறந்து ஊழல் புரிந்து வருகின்றனர். மடியில் கனம் உள்ளதால் மத்தியஅரசுக்கு அடி பணிந்து உள்ளனர். அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. இதை எதிர்கட்சிகள் சொல்லவில்லை. அறப்போர் இயக்கம் பட்டியலிட்டுள்ளது. உடுமலையை சேர்ந்த அமைச்சரின்ஊழல் குறித்து விரைவில் வெளியிடப்படும். இந்த அரசு மக்கள் நலன்  குறித்து சிந்திக்காத அரசு. இது விரைவில் தூக்கி எறியப்பட வேண்டும். அமைச்சர்கள் மட்டுமல்ல காவல்துறை டிஜிபி மீது கூட குட்கா ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இவர்களை சிபிஐ விசாரிக்கும் அளவிற்கு தமிழகத்தில் ஊழல் மலிந்துள்ளது. மத்தியில் ஆள்பவர்கள் இடும் கட்டளையை நிறைவேற்றும் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு முடிவுக்கு கொண்டு வந்து, யாருக்கும் பயப்படாத மக்களாட்சியை விரைவில் தருவோம்.உடுமலையில் ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவோம். உயர்கல்வி பயிலும்  மாணவர்களுக்காக பொறியியல் கல்லூரி அமைக்கப்படும். பாராளுமன்ற தேர்தலுடன்,  சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும். துரோக ஆட்சியை தூக்கி எறிவோம். இவ்வாறு டி.டி.வி.தினகன் பேசினார்.பிரசார பயணத்தின் போது மாநில நிர்வாகிகள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, மாவட்ட செயலாளர் சண்முகவேலு, மாவட்ட நிர்வாகிகள் சேலஞ்சர் துரை, கலைச்செல்வன், தம்பி இஸ்மாயில், சிவசாமி, சுகுமார், அலாவுதீன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், தொழில்நுட்ப பிரிவு சிவகுமார், நகர செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.இதைத்தொடர்ந்து குமரலிங்கம், நால்ரோடு, குறிச்சி கோட்டை, மூணு ரோடு, எரிசனம்பட்டி, கோலார்பட்டி, திப்பம்பட்டி வழியாக இரவு பெதப்பம்பட்டியில் பயணத்தை முடித்தார்.

Related Stories: