கல்லணை கொள்ளிடத்தில் புதிய பாலத்திற்கு தயாரான உத்தரங்கள் விரிசலுக்கு தரமற்ற கலவை காரணமா?

திருச்சி,செப்.21: திருச்சியை அடுத்த கல்லணை அருகே உள்ள கிளிக்கூடு என்ற கிராமத்தில் இருந்து பூண்டி செல்லும் சாலையை இணைக்கும் வகையில் புதிய பாலம் ரூ.64 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் கல்லணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1.052 கி.மீ. நீளத்திலும், பாலத்தில் ஒரே நேரத்தில் 3 பஸ்கள் செல்லும் வகையில் 42மீ அகலத்திலும் கட்டுமான பணி நடந்து வந்தது. இதற்காக 24 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் உத்தரங்கள் (கிரைடர்) பொருத்தும் பணி நடந்து வந்தது. இதுவரை 25க்கும் மேற்பட்ட உத்தரங்கள் கிரேன்மூலம் பாலத்தின் தூண்களுக்கிடையே இணைக்கப்பட்டது. மேலும் 42 கிரைடர்கள் தயாரிக்கப்பட்டு பாலத்தின் அடியில் பல மாதங்களாக வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிரைடர்களை புரட்டி போட்டு சென்றது. இதில் கிரைடர்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. மீண்டும் சேதமடைந்த கிரைடர்களை அப்படியே தூக்கி நிறுத்த ஏற்பாடு நடந்து வந்தது. இதனால் பாலம் சில வருடங்களில் சேதமாகி விடும் என்ற செய்தி வெளியான நிலையில் திருச்சி என்ஐடி சிவில்துறை தலைவர் நடராஜன் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர் சூரியநாராயணன் உள்ளிட்ட 5 பேர்குழு நேற்றுமுன்தினம் ஆய்வு செய்து  சேதமடைந்த கிரைடர்களை பொருத்த வேண்டாம் என கூறி பணிகளை நிறுத்தினர். இந்நிலையில் ஆய்வில் 7 கிரைடர்கள் முற்றிலும் சேதமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டு அவை நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 35 கிரைடர்களையும் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளனர்.இது குறித்து ஆய்வு குழுவினர் கூறியதாவது:

கிரைடர்கள் சேதமடைந்ததற்கு காரணம் தண்ணீரின் வேகமா அல்லது தரமற்ற கலவையா என்பது முதல்கட்ட சோதனையில் தெரியவரும். சேதடைந்த கிரைடர்கள் கான்கிரீட்டை ஆய்வுக்கு அனுப்ப இருக்கிறோம். சேதமடைந்த 35 கிரைடர்களையும் நவீன தொழில் நுட்பம் மூலம் ஸ்கேன் செய்தால் அதன் உள்ளே இருக்கும் உறுதி தன்மை தெரியவரும். அந்த ரிசல்ட் வந்த பிறகு தான் கிரைடர்களில் ஏற்பட்ட விரிசலுக்கு காரணம் என்ன என்பது உறுதியாக தெரியவரும் என்றார்.

Related Stories: