×

திருச்சி ஜிஹெச்சில் தீத்தடுப்பு ஒத்திகை

திருச்சி,செப்.21: திருச்சி அரசு மருத்துவமனை கட்டிடங்களில் தீப்பிடித்தால் நவீனரக தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைப்பது குறித்து தீயணைப்பு வீரர்களின் ஒத்திகை நடந்தது. இந்த திடீர் ஒத்திகை ஜிஹெச்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி அரசு மருத்துவமனையில் 1,500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும், தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை 10.15 மணியளவில் அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தின் பின்புறம் திடீரென நவீன ஸ்கை லிப்ட் தீயணைப்பு கருவி உள்பட 3 வாகனங்கள் வந்தது. அதிலிருந்து தீயணைப்பு நிலைய மாவட்ட அலுவலர் ராமமூர்த்தி மேற்பார்வையில், உதவி அலுவலர் கருணாகரன், நிலைய அலுவலர் தனபால் ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற் பட்ட தீயணைப்பு வீரர்கள் திபுதிபுவென புதிய கட்டிடத்துக்குள் சென்றனர்.பின்னர் அங்கு தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வரப்பட்டு அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் 6வது மாடியில் தீயை அணைக்க நீட்டிப்பு ஏணி (ஸ்கைலிப்ட்) மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீ அணைக்கப்பட்டது.இதனால் அந்த பகுதியில் நோயாளிகள், பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தான் இது தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி என தெரிய வந்தது. இதனால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் உள்ளிட்ட மக்கள் நிம்மதியடைந்தனர்.இதுகுறித்து தீயணைப்பு நிலைய அதிகாரிகள் கூறுகையில், 6 மாதத்துக்கு ஒரு முறை அரசு ஆஸ்பத்திரி, பள்ளி, கல்லூரிகள், அடுக்குமாடி கட்டிடங் களில் தீத்தடுப்பு ஒத்திகை நடத்துவது வழக்கமான ஒன்றுதான். அதுபோல் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிபத்து ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபடுவது, தீயில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு எப்படி முதலுதவி அளிப்பது, தீயை அணைப்பது, மாடியில் தீவிபத்து ஏற்பட்டால் நீட்டிப்பு ஏணியில் சென்று தண்ணீர் பீய்ச்சி அணைப்பது போன்ற ஒத்திகை நடத்தப்பட்டது என்றனர்.தீயணைப்பு போக்குவரத்து நிலைய அலுவலர் சரவணன் கூறுகையில், திருச்சியில் பல அடுக்கு மாடி கட்டிடங்களில் தீப்பிடித்ததால் தீயை அணைக்க  ஸ்கை லிப்ட் தீயணைப்பு கருவி (நீட்டிப்பு ஏணி கருவி) கொண்டு வரப்பட்டுள்ளது. இது வானூர்தி நீட்டிப்பு ஏணியாகும். இந்த ஏணியை 120 அடி உயரத்துக்கு உயர்த்தலாம். இதன் மூலம் மாடிகளில் சிக்கிய 5 பேரை ஒரே நேரத்தில் மீட்டு வர முடியும். சென்னை, கோவை, மதுரையை அடுத்து திருச்சியில் இந்த ஏணி பயன்படுத்தப்படுகிறது என்றார். ஒத்திகையிலும் செல்பி மயம்
தீ விபத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சிக்கு பின், மருத்துவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதி நவீன ஸ்கை லிப்ட் தீயணைப்பு கருவி மறுபடியும் இயக்கப்பட்டது. அதில் டீன் அனிதா தலைமையிலான மருத்துவர்கள் 6 மாடி கட்டிடம் வரை சென்றனர். அப்படி செல்லும் போது ஒருவருக்கொருவர் செல்பி எடுத்துக் கொண்டனர்.





Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ