ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் கூலிப்படையினர் 5 பேர் சிக்கினர்

திருச்சி, செப்.21: திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப்படையினர் 5 பேரை பிடித்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் தனபால் (58). வீடு புரோக்கராக இருந்த இவர், தற்போது ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். கடந்த 18ம் தேதி மாலை வீட்டில் இருந்து கிளம்பிய தனபால் இரவு வரையிலும் வீடு திரும்பவில்லை.இதுபற்றி கே.கே.நகர் போலீசில் நேற்று தனபாலின் சகோதரர் மணி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தனபால் செல்போனுக்கு கடைசியாக வந்த போன் எண்களை வைத்து விசாரணை நடத்தியதில், கடைசியாக ஏர்போர்ட்டை சேர்ந்த பெண் ஒருவர் பேசியது பதிவாகியிருந்தது தெரியவந்தது.இதையடுத்து செல்போனில் பதிவான எண்ணின் முகவரிக்கு சென்று விசாரித்தபோது அது ஏர்போர்ட் பகுதியில் இட்லிகடை நடத்தி வரும் பெண்ணின் செல்போன் என தெரிய வந்தது. அவரிடம் விசாரித்தபோது, செலவுக்கு எப்போதாவது அவரிடம் கடன் வாங்கு வதாகவும், பணம் கேட்பதற்காகத்தான் போன் செய்தேன். வேறு எதுவும் தனக்கு தெரியாது என்றார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில் புரோக்கராக தொழிலை துவங்கிய தனபால் ரியல் எஸ்டேட் அதிபராக வளர்ந்துள்ளதால் தொழில்போட்டி, பணம் கொடுக்கல் வாங்கல் என பலருடன் அவருக்கு முன் விரோதம் இருந்து வந்ததும், கடைசியாக அவர் சமயபுரம் டோல்கேட்டில் ரூ.12ஆயிரம் பணம் எடுத்திருப்பதால் கூலிப்படையினர் கடத்தி சென்றது தெரியவந்தது.எனவே தனபாலுக்கு யார், யாருடன் முன்விரோதம் உள்ளது என இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், கூலிப்படை யை சேர்ந்த 2 பேர் நேற்று மாலையில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் தனபாலை கடத்த சொன்னது யார்? அவர் எங்கு கடத்தி வைக்கப்பட்டுள்ளார்? என போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் காட்டூர் பகுதியில் தஞ்சையில் இருந்து திருச்சிநோக்கி வந்த காரை மடக்கிப்பிடித்தனர். அந்த காரை பறிமுதல் செய்து காரிலிருந்த 3 பேரை பிடித்த தனிப்படையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர் கைது: திருச்சி  பெரியமிளகுபாறை செல்வநகரை சேர்ந்தவர் சிவா (40). திருச்சி பழைய கலெக்டர்  அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர்  ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி சிவாவிடம் ரூ.200ஐ பறித்து சென்றார்.இதே  போல் திருச்சி அன்னைநகர் சத்தியா நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்திக்  (20). அதே பகுதியில் பாரதிநகர் ரைஸ்மில் அருகே நின்று கொண்டிருந்தார்.  அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி  கார்த்திக்கிடம் ரூ.500 பறித்து சென்றார்.இதுகுறித்து 2 பேரும்  தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் செசன்சு நீதிமன்றம், தில்லைநகர்  போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், திருச்சி குப்பன்குளம் பாரதிநகரை சேர்ந்த சின்னையன் மகன்  தினேஷ்குமார் (22), பெரிய மிளகுபாறையை சேர்ந்த சக்திவேல் மகன் தினேஷ் என்ற  தொப்புளான் இருவரும் மேற்கண்ட வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: